பஸ்சில் மடிக்கணினி திருடியவர் கோர்ட்டில் சரண்
நெல்லையில் பஸ்சில் பயணியின் மடிக்கணினியை திருடியவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
நெல்லை:
நெல்லையில் பஸ்சில் பயணியின் மடிக்கணினியை திருடியவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
மடிக்கணினி திருட்டு
கோவையை சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது 64). தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லைக்கு வந்திருந்த இவர் நெல்லை தற்காலிக புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தனியார் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது தனது மடிக்கணினியை பஸ்சுக்குள் இருந்த கேரியரில் வைத்தார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது, மடிக்கணினி காணாமல் போனதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
கண்காணிப்பு கேமரா
இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த தனியார் பஸ் குறித்து விசாரித்தனர். அப்போது, அந்த பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் திருட்டு காட்சி பதிவாகி இருந்தது தெரியவந்தது.
அதில் ரெங்கநாதன் மடிக்கணினியை கேரியரில் வைத்ததும், பஸ்சுக்குள் ஏறிய ஒருவர் பின் இருக்கையில் அமருவது போல் நடித்து நைசாக அந்த மடிக்கணினியை திருடிக்கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கி சென்றதும் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.
கோர்ட்டில் சரண்
அந்த வீடியோ காட்சியை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அம்பை அருகே உள்ள வைராவிகுளம் பொத்தை பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி (42) என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வெள்ளைச்சாமி நேற்று முன்தினம் நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர், கோர்ட்டு உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.