எனது கஷ்டத்திற்கு நீதான் காரணம் என்று கூறி மதுபோதையில் அம்மன் சிலையை உடைத்த தையல் தொழிலாளி விராலிமலை அருகே பரபரப்பு

விராலிமலை அருகே எனது கஷ்டத்திற்கு காரணம் நீதான் என்று கூறி அங்காளம்மன் சாமி சிலையை உடைத்த தையல் தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-19 18:09 GMT
விராலிமலை:
அங்காளம்மன் கோவில் 
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா ராஜகிரி குளவாய்ப்பட்டி அருகே சாலை ஓரத்தில் 50 ஆண்டுகால பழமைவாய்ந்த அங்காளம்மன் கோவில் உள்ளது. குளவாய்ப்பட்டியை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவர் கோவில் பூசாரியாக உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலை சீரமைக்க புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. அப்போது கருவறையிலிருந்த 3 அடி உயரமுள்ள அங்காளம்மன் சாமி சிலையை கோவில் நிர்வாகிகள் எடுத்து கோவில் வெளிமண்டபத்தில் வைத்திருந்தனர். அங்கு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. 
அம்மன் சிலை உடைப்பு 
இந்நிலையில் பூசாரி சுந்தரலிங்கம் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பிறகு இரவு கோவிலில் மின்விளக்கை போடுவதற்காக சுந்தரலிங்கம் வந்தார். அப்போது, அம்மன் சிலை உடைக்கப்பட்டு கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் இதுகுறித்து ஊர்பொதுமக்களிடம் கூறியுள்ளார். 
தையல் தொழிலாளி கைது
பின்னர் அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்குரிய வகையில், ஒருவர் மதுபோதையில் படுத்திருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவரை பிடித்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் விராலிமலை அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தை சேர்ந்த வீரய்யா மகன் கண்ணன் (வயது 41) என்பதும், தையல் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. 
தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மன வேதனையில் விராலிமலைக்கு வந்து மது அருந்திவிட்டு மீண்டும் வீட்டிற்கு குளவாய்ப்பட்டி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையோரத்தில் இருந்த அங்காளம்மன் கோவிலில் சாமிகும்பிட சென்றவர், அங்கிருந்த அம்மன் சிலையிடம் சென்று, எனது கஷ்டத்திற்கு காரணம் நீதான் என கூறி சிலையை கீழே தள்ளி உடைத்ததாக போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்