பி.ஏ.பி.கால்வாயில் கரைகளுக்கு மேல் தண்ணீர் வீணாகும் அபாயம்

உடுமலை அருகே சில இடங்களில் பி.ஏ.பி.கால்வாயில் இரண்டு பக்கமும் உள்ள கரைகளுக்கு மேல்பகுதியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் தண்ணீர் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-08-19 17:51 GMT
உடுமலை
உடுமலை அருகே சில இடங்களில் பி.ஏ.பி.கால்வாயில் இரண்டு பக்கமும் உள்ள கரைகளுக்கு மேல்பகுதியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் தண்ணீர் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்
பரம்பிக்குளம், ஆழியாறு பாசனத்திட்டத்தில் (பி.ஏ.பி) உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து 4-வது மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் 94 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இந்த தண்ணீர் பி.ஏ.பி. உடுமலை கால்வாயிலும் சென்று கொண்டுள்ளது. இந்த கால்வாயில் ஆங்காங்கு படிக்கட்டுகள் உள்ளன.
அந்த இடங்களில் சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்தவர்கள் துணிகளை கொண்டு வந்து துவைத்து எடுத்து செல்கின்றனர். அவர்கள் கால்வாயில் குளித்தும் செல்கின்றனர். சில இளைஞர்கள் படிக்கட்டுகள் இல்லாத பகுதியிலும் டைவ் அடித்து குளித்து வருகின்றனர். சில இடங்களில் முதியவர்கள் சிலர் ஆபத்தை உணராமல் தனியாக வந்து குளிக்கின்றனர். தண்ணீர் ஆர்ப்பரித்து வேகமாக சென்று கொண்டுள்ள நிலையில் தனியாக செல்கிறவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
தண்ணீர் விரயம்
தற்போது 4-வது மண்டல பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர், கால்வாயின் இரண்டு புறமும் உள்ள கரைகளை தொட்டபடி ஆர்ப்பரித்து செல்கிறது. இதை பார்ப்பதற்கு ரம்யமாக உள்ளது.
அதேசமயம் சில இடங்களில் கால்வாய் கரையின் விளிம்பிற்கு மேல், வெளிபகுதியிலும் தண்ணீர் செல்கிறது. அதனால் அந்த பகுதியில் தண்ணீர் விரயமாகிறது. இதை பி.ஏ.பி.அதிகாரிகள் கண்காணித்து, தண்ணீர் விரயமாகாதபடி செல்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்