குடிசைமாற்று வாரிய வீடு பெற 1,647 பேர் விண்ணப்பம்

குடிசைமாற்று வாரிய வீடு பெற மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் 1,647 பேர் விண்ணப்பித்தனர். இதற்கான சிறப்பு முகாமில் சமூக இடைவெளியின்றி குவிந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-19 17:37 GMT
திருப்பூர்
குடிசைமாற்று வாரிய வீடு பெற மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் 1,647 பேர் விண்ணப்பித்தனர். இதற்கான சிறப்பு முகாமில் சமூக இடைவெளியின்றி குவிந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிசைமாற்று வாரிய வீடுகள்
திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் மூலமாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி, நெருப்பெரிச்சல், அவினாசி, உடுமலை, பல்லடம் ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3 ஆயிரத்து 840 வீடுகள் தயார் நிலையில் உள்ளன. 
இந்த வீடுகளில் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு முதல்கட்டமாக  வீடு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் விண்ணப்பிப்பதற்கு வசதியாக திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று காலை சிறப்பு முகாம் நடைபெற்றது. குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் மனுக்களை பெற்றனர்.
1,647 பேர் விண்ணப்பித்தனர்
கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை முதல் அதிக அளவில் விண்ணப்பிக்க வந்தனர். அதுபோல் ஆதரவற்ற விதவைகளும் அதிக அளவில் குவிந்தனர். உரிய சான்றுகளுடன் வந்து விண்ணப்பம் கொடுத்தனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ளவர்களை தவிர கிராமப்புறங்களில் உள்ளவர்களும் வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி விண்ணப்பித்தனர். அவர்களிடம் இருந்தும் விண்ணப்பம் பெறப்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. 
மக்கள் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து கலெக்டர் வினீத் சிறப்பு முகாம் நடந்த கூட்ட அரங்குக்கு வந்து ஆய்வு செய்தார். சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார்.
விண்ணப்பங்களை பெறும் கூட்ட அரங்குக்கு முன்பு ஆண்களும், பெண்களும், மாற்றுத்திறனாளிகளும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள். நேற்றைய முகாமில் மொத்தம் 1,647 பேர் விண்ணப்பித்தனர்.
26-ந் தேதி சிறப்பு முகாம்
இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் கலெக்டரிடம் தெரிவிக்கப்படும். அதன்பிறகு அந்த மனுக்கள் தாசில்தார் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீண்டும் மறு ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பிறகு ஆதரவற்ற விதவைகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வருகிற 26-ந் தேதியும் கலெக்டர் அலுவலகத்தில் இதுபோல் சிறப்பு முகாம் நடக்கிறது.

மேலும் செய்திகள்