வியாபாரி பலி
கொடைரோடு அருகே லாரி மீது கார் மோதியதில் வியாபாரி பலியானார்.
திண்டுக்கல்:
கோவை அன்னூர் எல்லை பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது 44). பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவர் மனைவி சத்தியா, உறவினர் விஜய் (12) மற்றும் மகன், மகள் ஆகியோருடன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைக்கு உறவினர் திருமண விழாவில் பங்கேற்க காரில் சென்று கொண்டிருந்தார்.
காரை சுந்தர் ஓட்டினார். கொடைரோடு அருகே ஊத்துப்பட்டி பிரிவு என்னுமிடத்தில் வந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் சுந்தர், அவருடைய உறவினர் விஜய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காரில் சுந்தரின் மனைவி, மகன், மகள் ஆகியோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தகவலறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்த அவர்கள் 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். ஆனால் செல்லும் வழியிேலயே சுந்தர் பரிதாபமாக இறந்தார்.
விஜய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.