பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூ விலை கிடுகிடு உயர்ந்தது.

Update: 2021-08-19 16:05 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நாள்தோறும் வரத்து, தேவையை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம்.

 இந்தநிலையில் நேற்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.200-க்கு விற்று வந்த மல்லிகை விலை உயர்ந்து கிலோ ரூ.2 ஆயிரத்து 500-க்கு விற்பனை ஆனது. அதேபோல் கிலோ ரூ.70-க்கு விற்ற வாடாமல்லி விலை அதிகரித்து ரூ.250-க்கும், கிலோ ரூ.300-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.600-க்கும், ரூ.400-க்கு விற்பனையான முல்லைப்பூ கிலோ ரூ.500-க்கும், ரூ.300-க்கு விற்ற ஜாதிப்பூ கிலோ ரூ.700-க்கும் விற்பனை ஆனது. அதேபோன்று கிலோ ரூ.80-க்கு விற்ற செண்டுமல்லி, கோழிக்கொண்டை தலா ரூ.150-க்கும், ரூ.120-க்கு விற்ற அரளி ரூ.200-க்கும், பட்டன் ரோஜா ரூ.250-க்கும் நேற்று விற்பனை ஆனது.


இதேபோல் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிலும் பூக்களின் விலை அதிகரித்தது. அதன்படி, மல்லிகை பூ கிலோ ரூ.1,500 முதல் 2 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும் முல்லைப்பூ கிலோ ரூ.1000, கனகாம்பரம் ரூ.800, ஜாதிப்பூ ரூ.500, நாட்டு சம்மங்கி ரூ.700, சம்பங்கி ரூ.500, தாமரை பூ ஒன்று ரூ.50, அரளிப்பூ ரூ.250, கோழிக்கொண்டை ரூ.200-க்கும் விற்பனையானது.

 பொதுவாக நேற்று மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. அதே சமயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வரலட்சுமி நோன்பு மற்றும் முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்தது. இதனால் பூக்களின் விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்