ஐகோர்ட்டு உத்தரவை மீறி பேனர் பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு
ஐகோர்ட்டு உத்தரவை மீறி பேனர் வைத்த பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் போலீசார் நேற்று முன்தினம் மணவாளநகர் சந்திப்பு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு பா.ஜ.க. தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ராமானந்தம், மாவட்ட செயலாளர் நவீன் ரெட்டி ஆகியோர் ஐகோர்ட்டு உத்தரவை மீறி பா.ஜ.க. சார்பில் பேனர் வைத்திருந்தனர். இதுதொடர்பாக போலீசார் மேற்கண்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல மணவாளநகர் வெங்கத்தூர் சந்திப்பு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஏழுமலை, முருகேசன், பீமாராவ், தீபன் ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி ஐகோர்ட்டு உத்தரவை மீறி பேனர் வைத்திருந்தனர்.
மேலும் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் எட்டி, யோகா, ராபின் ஆகியோரும், காமராஜர் சிலை அருகே ராபின் என்பவரும் ஐகோர்ட்டு உத்தரவை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி பேனர் வைத்திருந்தனர். இதை தொடர்ந்து போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.