குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 2 பேரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 2 பேரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
17 டன் ரேஷன் அரிசி
பொள்ளாச்சியை அடுத்த திப்பம்பட்டியில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்தி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் நேரடியாக அங்கு சென்று ஆய்வு செய்து 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து பொள்ளாச்சியை சேர்ந்த முகமது தவுபிக் (வயது 23) என்பவரை கைது செய்தனர்.மேலும் இதேபோன்று ஆனைமலையை சேர்ந்த ஞானபிரகாஷ் (22) என்பவரும் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
தற்போது கைதான 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில் 2 பேர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதாக வழக்குகள் உள்ளன.
குண்டர் தடுப்பு சட்டம்
இதன் காரணமாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஆபாஷ்குமார் உத்தரவின் பேரில் சூப்பிரண்டு ஸ்டாலின் முகமது தவுபிக், ஞானபிரகாஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதை ஏற்றுக் கொண்ட கலெக்டர் சமீரன் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். தற்போது முகமது தவுசிக், ஞானபிரகாஷ் ஆகியோர் சிறையில் உள்ளதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணையை சிறைய அதிகாரிகளிடம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழங்கினார்கள்.