தனியார் தோட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
கூடலூர் அருகே நிலுவை சம்பள தொகையை வழங்கக்கோரி தனியார் தோட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்
கூடலூர் அருகே நிலுவை சம்பள தொகையை வழங்கக்கோரி தனியார் தோட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல்கூடலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் குடும்பத்தை நிர்வகிக்க முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி தொழிற்சாலைக்கு செல்லும் சாலையில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில் தொழிலாளர்கள் நேற்று காலை 10 மணிக்கு திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் சிவக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 50 நிரந்தர மற்றும் 300 தற்காலிக தொழிலாளர்கள் அந்த தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருவதாகவும்,
நிரந்தர தொழிலாளர்களுக்கு 6 மாத சம்பளமும், தற்காலிக தொழிலாளர்களுக்கு 2 மாத சம்பளமும் வழங்கப்படவில்லை எனவும் தாசில்தாரிடம் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் தோட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்ட அலுவலர்களிடம் தாசில்தார் விசாரணை நடத்தினார். அதில், காபி உள்ளிட்ட பயிர்களை அறுவடை செய்தவுடன் தொழிலாளர்களின் சம்பளம் வழங்கப்படும் என்று தோட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.
சுமுக தீர்வு
இதை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. மேலும் 2 மாத சம்பளத்தை வழங்கினால் கூட போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர். உடனே ஆர்.டி.ஓ. சரவணனிடம், தாசில்தார் தொலைபேசியில் பேசினார். பின்னர் ஆர்.டி.ஓ. தலைமையில் தொழிலாளர் நலத்துறையினர், போலீசார், தோட்ட நிர்வாகத்தினர்,
தொழிற்சங்கத்தினர் என அனைத்து தரப்பினரும் கொண்ட கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விரைவில் நடத்தப்படும். அதில் சுமுக தீர்வு காணப்படும் என்று தாசில்தார் சிவக்குமார் உறுதியளித்தார். இதை ஏற்று மதியம் 2 மணிக்கு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.