மீனவர் வீட்டில் தீ விபத்து; பணம், பொருட்கள் எரிந்து நாசம்
மீனவர் வீட்டில் தீ விபத்து பணம், பொருட்கள் எரிந்து நாசம்
குளச்சல்,
குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்தவர் பெல்லார்மின் (வயது 52), மீனவர். இவர் வசித்து வரும் வீட்டின் மேல் மாடியில் இவருடைய தம்பி செல்வன் (45), தனது மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் அனைவரும் கீழ் தளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, செல்வன் தங்கியிருக்கும் மாடி அறையில் இருந்து சத்தம் கேட்டு சென்று பார்த்தனர். அப்போது, அங்கு பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இதுபற்றி குளச்சல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டிலிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம், மீன் பிடி உபகரணங்கள், கட்டில், பீரோ, ஆதார் அட்டை, மீனவர் சங்க அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகியது.
இதுகுறித்து பெல்லார்மின் கொடுத்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.