ராணுவ அதிகாரியிடம் சிக்கிய வடமாநில கொள்ளையன்

பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும்போது, ராணுவ அதிகாரியிடம் வடமாநில கொள்ளையன் சிக்கினான்.

Update: 2021-08-18 17:40 GMT
பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும்போது, ராணுவ அதிகாரியிடம் வடமாநில கொள்ளையன் சிக்கினான். 
ராணுவ அதிகாரி
பெருந்துறை ஈரோடு ரோடு, கச்சேரித் தோட்டத்தில் வசித்து வருபவர் குமணன் (வயது 57). ராணுவத்தில் பிரிகேடியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி மேகலா (52). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர்.
மாலை 4.30 மணியளவில் இருவரும் வீட்டிற்கு  வந்தனர். அப்போது வீட்டின்  பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உடனே குமணன் வீட்டுக்குள் சென்று பார்த்தார். உள்ளே பொருட்கள் தாறுமாறாக சிதறிக் கிடந்தது. 
சமையல் அறைக்குள்...
அப்போது வீட்டின் சமையல் அறைக்குள் இருந்து ஏதோ சத்தம் வந்தது. உடனே குமணன் நைசாக சமையல் அறைக்குள் சென்று அங்கு பதுங்கியிருந்த திருடனை கையும், களவுமாக பிடித்தார். தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினரும் அங்கு வந்தனர். பின்னர் அனைவரும் சேர்ந்து சிக்கியவனை பெருந்துறை போலீசில் ஒப்படைத்தார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (30). என்பதும், குமணன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருட முயன்றபோது பிடிபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.

மேலும் செய்திகள்