கடந்த ஆண்டை விஞ்சியது; தஞ்சை மாவட்டத்தில், இதுவரை 10 லட்சம் டன் நெல் கொள்முதல்

கடந்த ஆண்டை விட அதிகஅளவாக தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-08-18 15:12 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். அதுதவிர கோடை சாகுபடியும் செய்யப்படும். தற்போது முன்பட்ட குறுவை நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய ஆங்காங்கே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களிலும் 159 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நேற்றுமுன்தினம் வரை 9 லட்சத்து 94 ஆயிரத்து 608 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் தஞ்சை வட்டாரத்தில் 90 ஆயிரத்து 45 டன்னும், திருவையாறு வட்டாரத்தில் 60 ஆயிரத்து 509 டன்னும், பூதலூர் வட்டாரத்தில் 86 ஆயிரத்து 878 டன்னும், ஒரத்தநாடு வட்டாரத்தில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 460 டன்னும், பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 96 ஆயிரத்து 75 டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

பேராவூரணி வட்டாரத்தில் 28 ஆயிரத்து 586 டன்னும், கும்பகோணம் வட்டாரத்தில் 90 ஆயிரத்து 651 டன்னும், திருவிடைமருதூர் வட்டாரத்தில் 1 லட்சத்து 769 டன்னும், பாபநாசம் வட்டாரத்தில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 633 டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்யப்பட்டதற்கான பணம்பட்டுவாடா அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்து 22 ஆயிரத்து 106 விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.1,876 கோடியே 94 லட்சத்து 37 ஆயிரத்து 652 வரவு வைக்கப்பட்டுள்ளது.

அறுவடை செய்யப்பட்ட நெல் பிற மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் ரெயில்கள், லாரிகள் மூலம் சென்னை, தர்மபுரி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, வேலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் ஆலைகளுக்கும் அரவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 608 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 6 லட்சத்து 87 ஆயிரத்து 574 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 லட்சத்து 7 ஆயிரத்து 34 டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 25 ஆயிரத்து 517 டன் நெல் இருப்பில் உள்ளது. இந்த நெல்லை சேமிப்பு கிடங்குகளுக்கும், அரவைக்கும் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றனர்.

மேலும் செய்திகள்