நாகை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு இலங்கை கடற்படையினர் மீதான வழக்கு வேதாரண்யம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம்
நாகை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினர் மீதான கொலை முயற்சி வழக்கு வேதாரண்யம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
வேதாரண்யம்:-
நாகை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினர் மீதான கொலை முயற்சி வழக்கு வேதாரண்யம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு
நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 28-ந் தேதி அக்கரைப் பேட்டையை சேர்ந்த கவுதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கலைச்செல்வன், தீபன், ராஜ், ஜீவா, மாறன், அரசுமணி, முருகானந்தம் உள்பட 10 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் மீனவர் கலைச்செல்வன் மீது ஒரு துப்பாக்கி குண்டு உரசிச்சென்றது. தலையில் காயம் அடைந்த அவர் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
வழக்கு மாற்றம்
இதுதொடர்பாக படகில் சென்ற நாகையை சேர்ந்த முருகானந்தத்திடம் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வாக்குமூலம் பெற்று இலங்கை கடற்படையை சேர்ந்த 7 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்கு நேற்று கடலோர காவல்படை குழுமத்தில் இருந்து வேதாரண்யம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.