கும்பகோணம், அய்யம்பேட்டை பகுதியில் பலத்த மழை - குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி
கும்பகோணம், அய்யம்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கும்பகோணம்,
கும்பகோணம் பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையின் காரணமாக கும்பகோணம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த மழை நடப்பு குறுவை சாகுபடிக்கு ஏற்றதாக அமைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
கும்பகோணம் பகுதியில் கடந்த பல நாட்களாக கடும் வெயில் நிலவி வந்தது. அவ்வப்போது சில நாட்கள் மிதமான மழை பெய்து வந்தது. மேலும் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை மழை பெய்து உள்ளது. மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.
அய்யம்பேட்டை, மாகாளிபுரம், பசுபதிகோவில், கணபதி அக்ரஹாரம், உள்ளிக்கடை, சக்கராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டம் மெதுவாக சரிய தொடங்கியது. திறக்கப்படும் நீரின் அளவும் நேற்று முதல் 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டதால் மிகவும் கவலை அடைந்துள்ளோம். தற்போதுள்ள நீரை கொண்டு குறுவை பயிரை காப்பற்ற முடியுமா? என்ற நிலையில் உள்ளோம். இந்த நிலையில் இப்பகுதியில் தற்சமயம் பெய்யும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இந்த மழை வளர்ச்சி பருவத்தில் உள்ள குறுவை பயிருக்கும், கரும்பு, வாழை பயிர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர்.
அதேநேரத்தில் கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றுப்படுகை பகுதியில் செயல்படும் செங்கல் சூளை பணிகள் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக செங்கல் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.