நெற்பயிர்களில் சுருட்டுப்புழு தாக்குதல்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெற்பயிர்களில் சுருட்டுப்புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2021-08-18 12:55 GMT
கம்பம்:

கம்பம் பள்ளதாக்கு பகுதியில் உள்ள வயல்களில் நெற்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த நெற்பயிர்கள், இலை சுருட்டு புழு நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து தகவல் அறிந்த வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் சின்னக்கண்ணு தலைமையிலான வேளாண்மைத்துறையினர் அங்கு விரைந்தனர். பின்னர் நோய் தாக்குதலுக்கு ஆளான வயல்களில் வேளாண்மைத்துறையினர் ஆய்வு செய்தனர். 

மேலும் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆலோசனை வழங்கினர்.

 இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறும்போது, இலை சுருட்டு புழு என்று அழைக்கப்படுகிற அந்துபூச்சிகள், நெற்பயிர்களில் உள்ள பச்சையத்தை அரித்து வெண்மையாக்கி விடும். இதனால் பயிர்களின் வளர்ச்சி குன்றி விளைச்சல் பாதிக்கப்படுகிறது. 

நெற்பயிரின் அனைத்து பருவத்திலும் இந்த பூச்சி தாக்குகிறது. இதனை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். வயல்களில் பயிர்களுக்கு இடையே வளரக்கூடிய புற்களை அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். 

தழைச்சத்து உரங்களை 3 முறை பிரித்து இடவேண்டும். அந்துப்பூச்சிகள் வெளிச்சத்தால் ஈர்க்கப்படுவதால், இரவில் விளக்குப்பொறி வைத்து கவர்ந்து அழிக்க வேண்டும். 

ஒருமுறை பயன்படுத்திய பூச்சி கொல்லியை மறுமுறை பயன்படுத்தக்கூடாது. மேலும் சுற்றுப்புறத்தில் வேப்ப எணெ்ணெய், வேப்பங்கொட்டைச்சாறு ஆகியவற்றை தெளித்து அந்துபூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர். 
------

மேலும் செய்திகள்