ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றக்கோரி வழக்கு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசும், வேதாந்தா நிறுவனமும் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-08-18 04:45 GMT
சென்னை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு இழுத்து மூடியது.

இந்நிலையில், ஆலை வளாகத்தில் உள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிடக்கோரி பேராசிரியர் பாத்திமா தாக்கல் செய்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கூடுதல் மனுதாக்கல் செய்ய மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி அளித்தனர்.

பின்னர், இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசும், வேதாந்தா நிறுவனமும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 5 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

தள்ளிவைப்பு

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு கூடுதல் நிலம் ஒதுக்கீடு செய்ததை ரத்துசெய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஏற்கனவே ஆலையை மூட வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்து அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை 6 மாதங்களுக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்