தோட்ட பாதையில் குழாய் பதித்தல் பிரச்சினை: பொதுமக்கள் திடீர் சாலை மறியல்; பவானிசாகர் அருகே பரபரப்பு

பவானிசாகர் அருகே தோட்ட பாதையில் குழாய் பதித்தல் பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-17 22:26 GMT
பவானிசாகர்
பவானிசாகர் அருகே தோட்ட பாதையில் குழாய் பதித்தல் பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
பவானிசாகர் அருகே உள்ள பகுதி பகுத்தம்பாளையம். இங்குள்ள விவசாய தோட்டங்களுக்கு செல்லும் பாதையில் குழாய் பதித்தல் மற்றும் கம்பிவேலி அமைப்பது சம்பந்தமாக அந்த பகுதியை சேர்ந்த இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து நேற்று சத்தியமங்கலம்- கொத்தமங்கலம் ரோட்டில் பகுத்தம்பாளையம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த  பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
பேச்சுவார்த்தை
இந்த போராட்டம் காரணமாக சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, தாசில்தார் ரவிசங்கர், ஒன்றியக்குழு தலைவர் கே.சி.பி.இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
அப்போது அதிகாரிகளிடம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், ‘தோட்டங்களுக்கு செல்லும் பாதையில் குழாய் பதித்தல் மற்றும் கம்பி வேலி அமைப்பது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை,’ என குற்றம்சாட்டினர். 
அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் கூறுகையில், ‘கோபி ஆர்.டி.ஓ. நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து பிரச்சினைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சத்தியமங்கலம் - கொத்தமங்கலம் சாலையில் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்