கன்னிப்பூ நெல் அறுவடை தொடங்கியது

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் அறுவடை தொடங்கியது. நெற்பயிரில் இலை கருகல் நோய் பரவலை தடுக்க அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

Update: 2021-08-17 20:21 GMT
நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் அறுவடை தொடங்கியது. நெற்பயிரில் இலை கருகல் நோய் பரவலை தடுக்க அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
கன்னிப்பூ நெல் சாகுபடி
குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கன்னிப்பூ, கும்பப்பூ என்ற இருபோக நெல் சாகுபடி நடைபெறும். இந்த ஆண்டுக்கான கன்னிப்பூ சாகுபடி கடந்த மே, ஜூன் மாதங்களில் தொடங்கியது. வேளாண்மைத்துறை சார்பில் 5,900 எக்டேர் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு 5,742 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. 
இந்தநிலையில் முதலில் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளது. அதாவது அகஸ்தீஸ்வரம் வட்டாரம் பறக்கை பகுதியில் இதுவரை 200 ஏக்கர் பரப்பளவிலும், குருந்தங்கோடு வட்டாரத்தில் 100 ஏக்கர் பரப்பளவிலும் நெல் அறுவடைப்பணிகள் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதிக்குள் கன்னிப்பூ அறுவடைப் பணிகள் நிறைவடையும் எனவும், அதன்பிறகு கும்பப்பூ சாகுபடி தொடங்கி வருகிற ஜனவரி மாதம் அறுவடைக்கு தயாராகும் எனவும் வேளாண்மை உதவி இயக்குனர் பிரான்சிஸ் ஜோஸ் தெரிவித்தார்.
இலை கருகல் நோய்
இந்த நிலையில் தோவாளை வட்டாரம் மற்றும் திருப்பதிசாரத்தில் கன்னிப்பூ நெற்பயிரில் பாக்டீரியல் இலை கருகல் நோய் ஆங்காங்கே தென்படுவது குறித்து திருப்பதிசாரம் கிருஷி விஞ்ஞான கேந்திர ஒருங்கிணைப்பாளர் லதா, பேராசிரியை கவிதா, தோவாளை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜோஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 
இந்த நோய் தாக்குதலால் இலை நுனி மற்றும் இலையின் ஓர பகுதியில் மஞ்சள் நிற கோடுகள் உருவாகி பின்னர் இலை முழுவதும் மஞ்சள் நிறமாகி விடும். காலை நேரங்களில் இலையில் பனித்துளி போல் வெளிவரும் பாக்டீரியல் கரைசல் காற்று அதிகமாக வீசும்போது எளிதில் வயல்களில் பரவுகிறது.
விவசாயிகளுக்கு ஆலோசனை
இந்த நோயால் மகசூல் 6 முதல் 60 சதவீதம் வரை பாதிக்கப்படுகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த முதலில் புல்வகை களைகள் இல்லாமல் சுத்தமாக வைக்க வேண்டும். தழைச்சத்தினை பிரித்து இடுதல் வேண்டும். வயல்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்க விடக்கூடாது. ஒரு ஏக்கரில் 20 சதவீத பசுஞ்சாண கரைசல் அல்லது ஸ்ரெப்டோமைசின் சல்பேட் டெட்ராசைக்கிளின் 120 கிராம் அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு 500 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்று விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த கூட்டாய்வில் பூதப்பாண்டி துணை வேளாண் அலுவலர் கணபதிசாமி, வேளாண் அலுவலர்கள் மகாதேவன், யோகப்பிரியா, அட்மா திட்ட அலுவலர்கள் ரமேஷ், ஷீலா மற்றும் உதவி வேளாண் அலுவலர் சண்முகவேல், சந்திராஜினி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்