உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணி ஆலோசனை கூட்டம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த ஆயத்த பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

Update: 2021-08-17 19:43 GMT
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த ஆயத்த பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் நெல்லை, தென்காசி உள்பட விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்துவதற்கு தமிழக தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

அதன்படி நெல்லை, தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு மண்டல அளவிலான தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

ஆணையர் விளக்கம்

மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், “தேர்தலை எப்படி நடத்த வேண்டும். தேர்தலின்போது அதிகாரிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்து விளக்கினார்.
கூட்டத்தில் தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி, கலெக்டர்கள் விஷ்ணு (நெல்லை), கோபால சுந்தரராஜ் (தென்காசி), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன் (நெல்லை), கிருஷ்ணராஜ் (தென்காசி), முதன்மை தேர்தல் அதிகாரி (கிராமம்) அருண்மணி, முதன்மை தேர்தல் அதிகாரி (நகராட்சி) தனலட்சுமி, தேர்தல் உதவி ஆணையர் சம்பத், மாவட்ட திட்ட இயக்குனர்கள் பழனி (நெல்லை), சரவணன் (தென்காசி) மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள். உதவி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள வாக்குப்பெட்டி மற்றும் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய ஆவணங்களை பழனிக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 73 ஆயிரத்து 986 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 12 மாவட்ட கவுன்சிலர்கள், 122 யூனியன் கவுன்சிலர்கள், 204 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 1,731 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என 2 ஆயிரத்து 69 பதவிகள் உள்ளன.

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 413 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 14 மாவட்ட கவுன்சிலர்கள், 144 ஒன்றிய கவுன்சிலர்கள், 221 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 1,905 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என 2,284 பதவிகள் உள்ளன. 2 மாவட்டங்களில் மொத்தம் 4,353 பதவிகளுக்கு நேரடியாக தேர்தல் நடைபெறும்.

யூனியன் தலைவர்

இதேபோல் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், யூனியன் தலைவர்கள், யூனியன் துணை தலைவர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து துணை தலைவர்களுக்கு மறைமுகமாக தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்