பாளையங்கோட்டை மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் வாபஸ்
பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் காய்கறிகள் விற்பனை மீண்டும் தொடங்கியது.
நெல்லை:
பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் காய்கறிகள் விற்பனை மீண்டும் தொடங்கியது.
காந்தி மார்க்கெட்
நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டில் காய்கறி கடைகள், மளிகை பொருட்கள், பூஜை பொருட்கள், பழங்கள், ஜவுளி, கருவாடு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என 540 கடைகள் செயல்பட்டு வந்தன.
இவைகளில் காய்கறி கடைகள் மட்டுமே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பழைய போலீஸ் குடியிருப்பு மைதானத்தில் இயங்கி வருகின்றன.
போராட்டம்
இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடியில் பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து விட்டு புதிதாக வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த கடைகளை காலி செய்யும்படி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு பழைய போலீஸ் குடியிருப்பு அல்லது ஜவகர் மைதானம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் மாற்று இடம் வழங்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து இங்கேயே கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன், பாளையங்கோட்டை தாசில்தார் ஆவுடையப்பன், மாநகராட்சி உதவி ஆணையாளர் ஜஹாங்கிர் பாஷா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. சென்னையில் இருந்து செல்போனில் தொடர்பு கொண்டு வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேசினார்.
இதையடுத்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
தொடர்ந்து நேற்று காலை பாளையங்கோட்டை மார்க்கெட் மற்றும் போலீஸ் குடியிருப்பு மைதானத்தில் உள்ள அனைத்து கடைகளும் மீண்டும் திறக்கப்பட்டு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை வழக்கம் போல் நடந்தது.
அமைச்சரிடம் மனு
இதுகுறித்து பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் ஐக்கிய சங்க தலைவர்
சாலமோன், பொதுச்செயலாளர் பெரியபெருமாள், பொருளாளர் இசக்கி ஆகியோர் கூறியதாவது:-
நாங்கள் கலெக்டர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். மேலும் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. எங்களிடம் பேசினார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் ஏற்கனவே அறிவித்த செயல்முறைகள் அமல்படுத்தப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். எனவே காந்திய வழியில் நாங்கள் நடத்திய காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம்.
மேலும் பொதுமக்கள், வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாநகராட்சியில் வளர்ச்சி திட்டத்துக்கு முழு ஆதரவு கொடுப்போம். இதுதொடர்பாக நகர்ப்புற துறை அமைச்சர் நேருவிடம் மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.