உடுமலை உழவர் சந்தைக்கு முன்பு காய்கறிகடைகளை வைத்தால் அப்புறப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை உழவர் சந்தைக்கு முன்பு காய்கறிகடைகளை வைத்தால் அப்புறப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை,
உடுமலை உழவர் சந்தைக்கு முன்பு காய்கறிகடைகளை வைத்தால் அப்புறப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உழவர்சந்தை
உடுமலை கபூர்கான் வீதியில் உழவர்சந்தை உள்ளது. இந்த உழவர்சந்தைக்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைந்த விளை பொருட்களை தினசரி அதிகாலையில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.தற்போது தினசரி சுமார் 75விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.காய்கறிகளை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் இருக்கும்.
சாலையோர கடைகள்
அதேசமயம் உழவர்சந்தைக்கு முன்பு கபூர்கான் வீதி, ஆசாத் வீதி ஆகிய இடங்களில் வியாபாரிகளால் தினசரி காலை நேரத்தில் திறந்த வெளியில் ஏராளமான காய்கறிகடைகள் வைக்கப்படுகின்றன. இந்த கடைகள் உழவர்சந்தை செயல்படும் நேரம்வரை இருக்கின்றன. சாலைப்பகுதியில் கடைகளை அமைப்பதால் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அத்துடன் காய்கறி வாங்குவதற்கு வரும் பொதுமக்கள் சிலர், சாலையோரம் அமைக்கப்படும் கடைகளில் காய்கறிகளை வாங்கிச்சென்று விடுவதால், உழவர்சந்தைக்குள் காய்கறி கடைகளை வைக்கும் விவசாயிகளுக்கு விற்பனை குறைவதாகக்கூறப்படுகிறது.
உழவர்சந்தைக்கு முன்பு 100மீட்டர் தூரத்திற்கு திறந்தவெளியில் சாலையோரம் காய்கறிகடைகளை வைக்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளதாகக்கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு, உழவர் சந்தைகளை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதேசமயம் உழவர்சந்தைக்கு முன்பு சாலையோரம் தற்காலிக காய்கறிகடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
எச்சரிக்கை
இந்த நிலையில் உடுமலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார், நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் நேற்று உழவர்சந்தைக்கு முன்பு வந்தனர். அங்கு சாலையோரம் திறந்த வெளியில் கடைவைத்திருந்தவர்கள், தள்ளுவண்டிகளில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வைத்திருந்தவர்கள் ஆகியோரிடம் இன்று (புதன்கிழமை) முதல் உழவர்சந்தைக்கு முன்பு காய்கறிகடைகளை வைக்கக்கூடாது, அவ்வாறு கடைகளை வைத்தால் அவை அப்புறப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அப்போது உழவர்சந்தை உதவி வேளாண் அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.