கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பா?
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, சயானிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவர் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
ஊட்டி,
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, சயானிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவர் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்த சயான், மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தின்ராய், திபு, சதீசன், சம்சீர்அலி, பிஜின், சந்தோஷ்சாமி, உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
விபத்தில் டிரைவர் சாவு
மேலும் வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜை போலீசார் தேடினர். 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி சேலத்தில் நடந்த சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார்.
மேலும், கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக பணிபுரிந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்தில் இருந்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சயானுக்கு சம்மன்
இந்த வழக்கில் சயான், மனோஜ் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்கள் ஊட்டியில் இருந்து வருகின்றனர். 8 பேர் ஜாமீனில் உள்ளனர். கடந்த 13-ந் தேதி நடந்த விசாரணையில் சயான் தரப்பில் வழக்கில் தொடர்புடையவர்களிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதியிடம் தெரிவித்தனர்.
போலீஸ் தரப்பில் கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோத்தகிரி போலீசார் நீதிமன்ற அனுமதி பெற்று சயானிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர்.
ரகசிய வாக்குமூலம்
இந்த நிலையில் நேற்று ஊட்டியில் நில அபகரிப்பு தடுப்பு தனிப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் (பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்) கோடநாடு கொலை வழக்கில் முதல் குற்றவாளியான சயானிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், விசாரணை அதிகாரியான கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை 3 மணி நேரம் சயானிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
முக்கிய ஆவணங்கள்
அப்போது ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜிடம் இருந்து கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போன சில முக்கிய ஆவணங்களை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்ததாகவும், கொலை வழக்கில் கூடலூர் அ.தி.மு.க. பிரமுகர்க ளுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
விசாரணை மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதால் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்த ரகசிய தகவல்களை போலீசாரிடம் சயான் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கோடநாடு கொலை வழக்கில் 103 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் 42 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் 18 பேரிடம் விசாரணை நடத்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் 3 பேரிடம் விசாரணை நடத்த ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.
ஐகோர்ட்டில் மேல்முறையீடு
வழக்கு விசாரணை முடிய உள்ள நிலையில் மீண்டும் முதலில் இருந்து விசாரணை தொடங்கி உள்ளது. போலீசார் மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.
மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, நீலகிரி மாவட்ட முன்னாள் கலெக்டர் சங்கர், முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.