தாராபுரம் அருகே மரத்தில் கார் மோதி அண்ணன்-தம்பிகளான என்ஜினீயர்கள் பலியானார்கள்.
தாராபுரம் அருகே மரத்தில் கார் மோதி அண்ணன்தம்பிகளான என்ஜினீயர்கள் பலியானார்கள்.
தாராபுரம்:
தாராபுரம் அருகே மரத்தில் கார் மோதி அண்ணன்-தம்பிகளான என்ஜினீயர்கள் பலியானார்கள். காரில் இருந்த அவர்களுடைய நண்பர்கள் 3 பேர் காயம் அடைந்தனர். சுற்றுலா சென்று விட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
என்ஜினீயரிங் பட்டதாரிகள்
திருப்பூர் பிச்சாபாளையம்புதூரை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன்கள் நரேன் (வயது 23) மற்றும் சுரேன் (21). என்ஜினீயரிங் பட்டதாரிகள். இவருடைய நண்பர்கள் திருப்பூர் யூனியன் மில்ரோடு சங்கீதா தியேட்டர் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன்கள் நவீன் (24), கார்த்திக் (23) மற்றும் பொங்கலூர் வேலுச்சாமி மகன் நிதிஷ் குமார் (22). இவர்கள் 5 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு 5 பேரும் ஒரு காரில் கொடைக்கானல் சென்றனர். அங்கு 2 நாட்கள் தங்கி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
பின்னர் நேற்று காலையில் 5 பேரும் காரில் திருப்பூருக்கு புறப்பட்டனர். காரை நரேன் ஓட்டியதாக கூறப்படுகிறது. டிரைவரின் இருக்கை அருகில் சுரேன் அமர்ந்து இருந்தார். பின் இருக்கையில் நவீன், கார்த்திக் மற்றும் நிதிஷ்குமார் அமர்ந்து இருந்தனர். பழனி-தாராபுரம் சாலையில் அலங்கியத்தை அடுத்த தாசநாய்க்கன் பட்டி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென்று சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது.
2 பேர் பலி
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடினர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் காருக்குள் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அலங்கியம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து பொதுமக்களுடன் சேர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டனர். அப்போது நரேனும், சுரேனும் இறந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காயம் அடைந்த மற்ற 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இறந்த நரேன் மற்றும் சுரேன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு உத்தரவின் பேரில் தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரே குடும்பத்தில் அண்ணன்- தம்பி இருவர் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.