திருவையாறு அருகே 2-வது மனைவியின் மகளுக்கு பாலியல் தொல்லை ‘போக்சோ’ சட்டத்தில் தொழிலாளி கைது
திருவையாறு அருகே 2-வது மனைவியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவையாறு:-
திருவையாறு அருகே 2-வது மனைவியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தொழிலாளி 2-வது திருமணம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்த 48 வயது தொழிலாளி ஒருவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் மனைவி, குழந்தைகளை பிரிந்து கோவையில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த கணவரை இழந்த 35 வயது பெண்ணுடன் அந்த தொழிலாளிக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 2 மகள்கள் இருக்கும் நிலையில், தொழிலாளி அந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
மகளுக்கு பாலியல் தொல்லை
கடந்த சில நாட்களாக தொழிலாளி தனது இரண்டாவது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே பூதலூர் பகுதியில் வெண்ணாற்றங்கரையில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
அப்போது இரண்டாவது மனைவியின் 13 வயது மகளுக்கு அந்த தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனது தாயிடம் தொழிலாளியின் அத்துமீறல் குறித்து கூறி உள்ளார்.
‘போக்சோ’ சட்டத்தில் கைது
இதுகுறித்து தொழிலாளி மீது அவருடைய இரண்டாவது மனைவி திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர்.