கல்லணையில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு உறவினர்கள் கண் முன்பு நேர்ந்த துயரம்

கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-17 17:00 GMT
திருக்காட்டுப்பள்ளி:-

கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார். 

பள்ளி மாணவர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சூரக்குப்பம, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் விஷ்வா(வயது 13). பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர் நேற்று தனது உறவினர்களுடன் திருச்சி மாவட்டம் சமயபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்ய வேனில் வந்தார். 
பின்னர் விஷ்வா, உறவினர்களுடன் கல்லணைக்கு வந்தார். கல்லணையில் உள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வெளியேறி வரும் நிலையில் மாணவர் விஷ்வா, கொள்ளிடம் ஆற்றில் இறங்கி உறவினர்களுடன் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது விஷ்வா எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி மாயமானார். 

ஆற்றில் மூழ்கி சாவு

இதையடுத்து அருகில் குளித்து கொண்டிருந்த உறவினர்கள் அவரை மீட்க முயன்றனர். இதை அறிந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) சீனிவாசன் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து சென்று கொள்ளிடம் ஆற்றில் இறங்கி மாணவரை தேடினர். இதில் ஆற்றில் மூழ்கி விஷ்வா பலியானது தெரிய வந்தது. ஆற்றின் ஒரு பகுதியில் கிடந்த அவருடைய உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மாணவரின் உடல் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 
இதுகுறித்து தோகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி, சப்-இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 உறவினர்கள் கண் முன்னே பத்தாம் வகுப்பு மாணவர் ஆற்றில் மூழ்கி பலியானது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

மேலும் செய்திகள்