கோவையில் 206 பேருக்கு கொரோனா

கோவையில் 206 பேருக்கு கொரோனா

Update: 2021-08-17 15:59 GMT
கொரோனா
கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை காட்டிலும் 2-வது அலையின் தாக்கம் தீவிரமாக இருந்தது. பெரியவர்கள், சிறியவர்கள் என அனைத்து தரப்பினரையும் வெகுவாக பாதித்தது. 

இதனால் கடந்த மே மாதத்தில் தினமும் 5 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் தீவிர தடுப்பு நடவடிக்கையின் பலனாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. 

அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 150-க்கும் கீழ் சென்றது.

 இந்தநிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக் கை அதிகரிக்க தொடங்கியது. அதையொட்டி உள்ள கோவையிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 மாதங்களாக கணிசமாக உயர்ந்தும், பின்னர் சற்று குறைவதுமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 217 பேர் கொரோனா வால் பாதிக்கப்பட்டனர். அதுவே நேற்று சற்று குறைந்து 206 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானார்கள். இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 33 ஆயிரத்து 228 ஆக அதிகரித்தது.
கொரோனாவில் இருந்து 229 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 2 லட்சத்து 28 ஆயரத்து 626 பேர் பூரண குணமடைந்து உள்ளனர்.


இதுதவிர கொரோனா தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 70 மற்றும் 62 வயது முதியவர்கள், 40 வயது ஆண் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். 

இதற்கிடையே கொரோனா தினசரி பாதிப்பில் மாநில அளவில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சென்னையே முதலிடத்தில் இருந்து வந்தது. கோவை 2-வது இடத்தில் நீடித்தது. 

ஆனால் சென்னை பின்னுக்கு தள்ளிவிட்டு கோவை மாவட்டம் கடந்த மே மாதம் 26-ந் தேதி முதல் இடத்தை பிடித்தது. அதன்பிறகு தொடர்ந்து முதல் இடத்திலேயே நீடித்து வந்தது.

நேற்று தினசரி தொற்று எண்ணிக்கை சென்னையில் 209 ஆனது. கோவையில் 206 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கோவை மாவட்டம் கடந்த 83 நாட்களுக்கு பிறகு முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு சென்றுள்ளது.

மேலும் செய்திகள்