கோவை
மத்திய மந்திரி எல்.முருகன் தமிழக மக்களின் ஆசியை பெறவும், கட்சியை வலுப்படுத்தவும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மக்கள் ஆசி யாத்திரை நடத்த முடிவு செய்தார்.
இதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து இந்த மக்கள் ஆசி யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரையில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினம் எல்.முருகன் விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.
அவரை வரவேற்க கோவை விமான நிலையத்தில் ஏராளமான பா.ஜனதா கட்சியினர் குவிந்தனர். கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
ஆனால் பா.ஜனதா கட்சியினர் தடையை மீறி ஒரே இடத்தில் குவிந்ததுடன், சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்று தெரிகிறது. இது கொரோனா விதி மீறலாக கருதப்பட்டது. இதையடுத்து பீளமேடு போலீசார் மத்திய மந்திரிக்கு வரவேற்பு அளிக்க திரண்ட மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்பட 250 பேர் மீது கொரோனா தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் கோவை பூமார்க்கெட் அருகே காமராஜர்புரத்தில் நடைபெற்ற மக்கள் ஆசி யாத்திரையில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாகவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் மதன்குமார் உள்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுதவிர அவினாசி ரோடு, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரியை வரவேற்று பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. தடையை மீறி பொது இடங்களில் பேனர் வைத்ததாக பா.ஜனதா நிர்வாகிகள் முரளி உள்பட பல்வேறு நிர்வாகிகள் மீது அந்தந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.