தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பஞ்சாயத்துகளில் 100 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பஞ்சாயத்துகளில் 100 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பஞ்சாயத்துகளில் 100 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
பயிற்சி வகுப்பு
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குருப்-1 போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா திருச்செந்தூரிலுள்ள தனியார் மஹாலில் நடந்தது. தொடக்க விழாவிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, தாசில்தார் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் பேச்சியம்மாள் வரவேற்று பேசினார். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்கள் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்
நிகழ்ச்சியில், திருச்செந்தூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் இப்ராஹிம்ஷா, சுகாதார ஆய்வாளர்கள் வெற்றிவேல்முருகன், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் செல்வக்குமார், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன்வேல், கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா நன்றி கூறினார்.
பின்னர், மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-
தடுப்பூசி
பஞ்சாயத்து வாரியாக மாணவ, மாணவிகளிடம் விருப்ப மனுக்கள் பெற்று பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கு வாட்ஸ் ஆப் குரூப் மூலம் இணைக்கப்படுவார்கள். பின்னர் அதனை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மூலம் ஒருங்கிணைந்து பயற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இதில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து சிறப்பு வகுப்பு ஏற்பாடு செய்து போட்டி தேர்வுகளுக்கு தயார்ப்படுத்தப் படுவார்கள். இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியானவர்கள் 14 லட்சம் பேர் உள்ளனர். இதுவரை 4 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். அனைத்து பஞ்சாயத்துகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளோம். இதுவரை மாவட்டத்தில் 22 பஞ்சாயத்துக்களில் உள்ள 100 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.