வங்கி கணக்கில் ரூ.1½ லட்சம் திருட்டு
எல்.ஐ.சி. பணம் தருவதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சத்தை திருடிய மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
எல்.ஐ.சி. பணம்
தேனி மாவட்டம் போடி நகரில் உள்ள போடிமெட்டு சாலையை சேர்ந்தவர் கந்தசாமி. அவருடைய மனைவி ரஞ்சிதம் (வயது 78). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கந்தசாமி இறந்து விட்டார்.
இந்தநிலையில், ரஞ்சிதம் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் ஒரு பெண் பேசினார்.
அந்த பெண், ரஞ்சிதம் கணவரின் பெயரில் ஆயுள்காப்பீட்டு தொகை (எல்.ஐ.சி.) உள்ளதாகவும், அதற்கான பணத்தை அனுப்பி வைப்பதற்கு வங்கி கணக்கு விவரங்களை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைக்குமாறு கூறி ஒரு வாட்ஸ்-அப் எண்ணை கொடுத்தார்.
வாட்ஸ்-அப் மூலம் தகவல்
ரஞ்சிதம் தன்னிடம் வாட்ஸ்-அப் இல்லை என்று கூறினார். அதனால், வேறு யாருடைய வாட்ஸ்-அப் எண்ணில் இருந்தாவது அனுப்பி வைக்குமாறு கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை அந்த பெண் துண்டித்து விட்டார்.
இந்த விவரங்களை அவர், தனது பேத்தி பிரசாந்தியிடம் (20) தெரிவித்தார். இதனையடுத்து பிரசாந்தியின் தாயாரும், ரஞ்சிதத்தின் மகளுமான ஸ்ரீதேவியின் வங்கி கணக்கு விவரங்களை அனுப்பி வைக்க ரஞ்சிதம் கூறினார்.
அதன்பேரில், பிரசாந்தியும் தனது தாயின் வங்கி கணக்கு விவரங்களை தொலைபேசியில் பேசிய பெண் கொடுத்த எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்தார்.
ரூ.1½ லட்சம் அபேஸ்
பின்னர் அவருடைய செல்போன் எண்ணுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் ரகசிய குறியீட்டு எண் (ஓ.டி.பி.) வந்துள்ளது. அந்த விவரங்களை அந்த பெண் தனக்கு அனுப்புமாறு கூறினார்.
அதை நம்பிய அவர், ஓ.டி.பி. எண்ணையும் அனுப்பி வைத்தார். அந்த வகையில் 6 முறை ஓ.டி.பி. எண்ணை அனுப்பி வைத்தார்.
இந்தநிலையில் பிரசாந்தியின் தாய் வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்தை அந்த மர்ம பெண் அபேஸ் செய்து விட்டார். இதை அறிந்த பிரசாந்தி அதிர்ச்சி அடைந்தார்.
வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட விவரத்தை அவர் தனது பாட்டியிடம் கூறினார். அவரும் அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து, தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ரஞ்சிதம் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து செல்போனில் பேசிய மர்ம பெண் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.