ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,893-க்கு ஏலம் - விவசாயிகள் மகிழ்ச்சி

செம்பனார்கோவில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,893-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-08-17 11:14 GMT
பொறையாறு,

செம்பனார்கோவில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. நாகை விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த மறைமுக ஏலத்தில் கடலூர், விழுப்புரம், தேனி, சத்தியமங்கலம், நாகை, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 10 வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலத்துக்கு எடுத்தனர்.

இதில் பருத்தி அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 893-க்கு ஏலம் போனது. சராசரியாக ரூ.7 ஆயிரத்து 650 என்ற விலைக்கும், குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 500 என்ற விலைக்கும் பருத்தி ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து விற்பனை குழு செயலாளர் ரமேஷ் கூறுகையில், ‘விவசாயிகள் பச்சை பயறு, உளுந்து, எள், நிலக்கடலை, தேங்காய், முந்திரி போன்ற விளை பொருட்களையும் எடுத்து வந்து மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு பயன் அடைய வேண்டும்’ என்றார்.

வருங்காலத்தில் அனைத்து விதமான விளை பொருட்களையும் விற்பனை கூடத்துக்கு எடுத்து வந்து விற்பனை செய்யும் விதமாக கூடுதல் கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்