தொன்மை வாய்ந்த சிவலிங்கமும், 2 பலகை சிற்பங்களும் கண்டெடுப்பு
மாம்பாக்கம் கிராமத்தில் தொன்மை வாய்ந்த சிவலிங்கமும், 2 பலகை சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை
மாம்பாக்கம் கிராமத்தில் தொன்மை வாய்ந்த சிவலிங்கமும், 2 பலகை சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டது.
சிவலிங்கமும், பலகை சிற்பங்களும்
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ்பன்னீர்செல்வம் மற்றும் உதயராஜா, சரவணன் ஆகியோர் இணைந்து தெள்ளார் பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது மாம்பாக்கம் கிராமத்தில் சாலையோரம் ஒரு மாமரத்தின் அடியில் சிவலிங்கமும், அதனருகே 2 பலகை சிற்பங்களும் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அதனை ஆய்வு செய்த போது அச்சிற்பங்கள் பல்லவர் காலத்தைச் சேர்ந்த லகுலீசர் மற்றும் பிள்ளையார் சிற்பம் என்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
சைவப்பிரிவுகளில் ஒன்றான பாசுபதத்தைத் தோற்றுவித்தவர் லகுலீசர். குஜராத் மாநிலத்தில் உள்ள காயரோஹனகத்தில் லகுலீசரால் தோற்றுவிக்கப்பட்ட பாசுபதம் தனது சீடர்கள் மூலம் இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது.
கி.பி. 3-ம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழக நிலப்பரப்பில் இப்பாசுபதம் வளர்ச்சியுற்று பல்லவர்கள் காலத்தில் சிறப்புற்று இருந்தது. இதுவரை 30-க்கும் குறைவான லகுலீசர் சிற்பங்களே தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
லகுலீசர் சிற்பம்
சுமார் 3 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கற்பலகையில் புடைப்பு சிற்பமாக லகுலீசர் வடிக்கப்பட்டுள்ளார். இவரின் தலையை முடிச்சுடன் கூடிய அழகான ஜடாபாரம் அலங்கரிக்க, இரு செவிகளிலும் பத்ர குண்டலமும், பெரிய விழிகளும் தடித்த உதட்டும் கொண்டு நீள்வட்ட முகம் லேசாகச் சாய்த்தவாறு அமைந்துள்ளது.
இவரின் வலது கையில் தனது ஆயுதமான தடி போன்ற லாங்குலத்தை கடக முத்திரையில் தாங்கி நிற்க, இடது கையை கடி முத்திரையில் இடையின் மீது வைத்துள்ளார். லாங்குலத்தின் அடிப்பகுதி மெல்லியதாகவும், அதன் மேல்பகுதி பருமனாகவும் காட்சி தருகிறது. கழுத்தில் அணிகலனாக சரபளியும், வயிற்றில் உதரபந்தமும் கொண்டு இடை ஆடையுடன் பத்மாசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். இது 7-ம் நூற்றாண்டின் கடைபகுதி அல்லது 8-ம் நூற்றாண்டின் தொடக்கக் காலமாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
இடம்புரி பிள்ளையார்
மேலும் 3 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கற்பலகையில் 4 கரங்களுடன் பிள்ளையார் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார்.
தலையை கரண்ட மகுடம் அலங்கரிக்கத் தனது மேல் வலது கரத்தில் நெற்பயிரையும், மேல் இடது கரத்தில் அக்கமாலையுடன், கீழ் வலது மற்றும் இடது கரத்தை தன் தொடையின் மீது வைத்தவாறு 2 கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார்.
யானையின் காது போன்றே பெரிய காது மடல்களுடன் கூடிய பருத்த முகத்திலிருந்து கீழ் நோக்கி இடப்பக்கம் சுருளும் துதிக்கையுடன் இடம்புரி பிள்ளையாராக காட்சி தருகிறார். மேலும் தும்பிக்கையின் வலப்பக்கம் கூறிய தந்தமும், இடப்பக்கம் சிறிய தந்தமும், தோளின் வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கமாகச் சரியும் பட்டையான முப்புரி நூலும், இருகைகளிலும் தோள்வளையும், இடையில் உதரபந்தமும் அணிந்து காட்சி தருகிறார்.
வளமையின் குறியீடாகச் சொல்லப்படும் நெற்பயிரை ஆயுதமாகக் கொண்டு இதுவரை வெகு சில பிள்ளையார்களே கண்டறியப்பட்டு உள்ளது.
பல்லவர் காலத்திய சிவாலயம்
இதன் காலமும் மேலே குறிப்பிட்ட லகுலீசரின் காலமே ஆகும். இதுவரை லகுலீசர் கண்டறியப்பட்ட இடங்களில் பெரும்பாலும் இதே போன்று பிள்ளையாரும் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விறு சிற்பங்களுடன் 2 அடி சதுர ஆவுடையுடன் இதே காலத்தைச் சேர்ந்த ஒரு சிவலிங்கமும் காணக்கிடைக்கிறது. இந்த 3 சிற்பங்களையும் வைத்துப் பார்க்கையில் இவ்விடத்தில் 7-ம் நூற்றாண்டுவாக்கில் பல்லவர் காலத்திய சிவாலயம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
கால ஓட்டத்தில் கோவில் அழிந்து இந்த 3 சிற்பங்கள் மட்டும் காலத்தின் சாட்சியாக எஞ்சி நின்று நமக்கு இவ்விடத்தின் தொன்மையை உணர்த்துகிறது.
இவ்வளவு தொன்மை வாய்ந்த அரிய சிற்பங்களை மக்கள் முறையாகப் பாதுகாத்து, சிறப்பான வழிபாடுகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.