அகவிலைப்படி வழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அகவிலைப்படி வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அகவிலைப்படியை உடனே வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணை தலைவர் கலா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் இளவரசன் முன்னிலை வகித்தார். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி மற்றும் சரண்டர் விடுப்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்ட முறையை அமல்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில் சங்க நிர்வாகிகள் நடராஜன், சிவபழனி, வெங்கடேசன், செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் உள்பட 7 இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.