7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூர், வாணியம்பாடியில் 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-17 10:56 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர், வாணியம்பாடியில் 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

ரேஷன் அரிசி கடத்தல்

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு, பேராம்பட்டு, ஜலகாம்பாறை வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மற்றும் உணவு வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் 5 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிய வந்தது. 

2 பேர் கைது

இதையடுத்து பசலிகுட்டை பகுதியைச் சேர்ந்த டிரைவர் நாராயணன், கிளீனர் கிரிஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 டன் ரேஷன் அரிசி, மினிலாரியை பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து உணவு வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வாணியம்பாடி

இதேபோல் வாணியம்பாடியை அடுத்த நேதாஜி நகர் பகுதியில், ஆலங்காயத்தில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த வாகனங்களை போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த மினிவேன் ஒன்று போலீசார் இருப்பதை பார்த்ததும் வேகமாக சென்றது.ள உடனடியாக போலீசார் மினிவேனை துரத்தி சென்றனர்.  சிறிதுதூரம் சென்ற மினிவேனின் சக்கரம் கழன்றி பழுதாகி சாலையின் நடுவே நின்றது. 

இதையடுத்து போலீசார் அங்கு சென்று மினிவேனை சோதனை செய்தபோது அதில் 2½ டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது.

டிரைவர் கைது

இதனைத்தொடர்ந்து ஆலங்காயத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி வந்த மேல்நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த டிரைவர் குமார் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மற்றும் மினிவேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்