புறாக்களை வேட்டையாடிய 2 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் அபராதம்
நாகையில் புறாக்களை வேட்டையாடிய 2 பேருக்கு வனத்துறை அலுவலர்கள் தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நாகப்பட்டினம்,
நாகை தம்பிதுரை பூங்கா அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அங்கு நின்ற புறாக்களை வேட்டையாடினர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறை அலுவலர்கள் புறாவை வேட்டையாடிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் காரைக்கால் அருகே கோயில்பத்து பகுதியை சேர்ந்த சிவா (வயது20), கார்த்திக் (23) என்பதும், இவர்கள் புறா, அணில் உள்ளிட்டவைகளை வேட்டையாடியது தெரியவந்தது.
இதையடுத்து வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவா, கார்த்திக் ஆகிய 2 பேருக்கும் தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.