சேலத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் அரசு ஊழியர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்
சேலத்தில் அரசு ஊழியர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட தலைவர் ஜெகஜோதி தலைமை தாங்கினார் செயலாளர் மலர்விழி வரவேற்று பேசினார். மாநில பொருளாளர் ரமேஷ் கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.
இதில் ஊதிய மாற்றத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயபாரதி நன்றி கூறினார்.
அரசு ஊழியர்கள்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகபெருமாள் தலைமை தாங்கினார். ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.
இதில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், பொருளாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
இதே போல சேலம் கோரிமேடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் நுழைவுவாயில் மற்றும் கோரிமேடு மாவட்ட தொழிலாளர் நல அலுவலகம் முன்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில பொருளாளர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பினர்.
வருவாய்த்துறை அலுவலர்கள்
மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட பல அலுவலகங்களில் பணியாற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் நேற்று கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை அணிந்து பணிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அதனுடன் பணியில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து பணியில் ஈடுபட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.