சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-16 21:30 GMT
சேலம்
தீக்குளிக்க முயற்சி
சேலம் காசக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவர் கூட்டுறவு துறையில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மகள் பெனிசா ரூத் (வயது 24). இவர் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். பெனிசா ரூத் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
நுழைவு வாயிலில் அவர் தான் மறைத்து வைத்து பாட்டிலில் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் வேகமாக சென்று அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். ஆனால் பெனிசா ரூத் திடீரென தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார். நான் கலெக்டரை பார்த்து பேச வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தார்.
போலீசார் விசாரணை
இதையடுத்து பெனிசா ரூத்தை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று ஆட்டோவில் ஏற்றி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம் கூறும் போது, நான் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தேன். அவருக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் நகை, பணம் கொடுத்துள்ளேன். மேலும் மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவையும் அவருக்கு வாங்கி கொடுத்துள்ளேன்.
ஆனால் தற்போது அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து நகை, பணம், மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை மீட்டு தரவேண்டும். காதலன் ஏமாற்றியதால் மனவேதனையில் இருந்த நான் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்தேன் என்றார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை மிரட்டல்
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி (42). நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அவரை போலீசார் தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசாரிடம் மீனாட்சி கூறும் போது, நானும் எனது கணவரும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.
என்னுடன் வசித்து வந்த மகளுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தேன். இந்த நிலையில் கணவர் உள்பட சிலர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பரபரப்பு
சேலம் காக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் அமுதா (70). இவர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது நுழைவு வாயிலில் அவருடைய பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த பாட்டிலில் மண்எண்ணெய் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்து அவரிடம் விசாரித்தனர்.
அப்போது போலீசாரிடம் அவர் கூறும் போது, எனக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். மகன்கள் தனியார் வங்கி ஒன்றில் ரூ.45 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளனர். இந்த நிலையில் வட்டி செலுத்தாததால் எங்களுடைய சொத்துகளை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் மனமுடைந்த நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் இங்கு வந்ததாக தெரிவித்தார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்