தாமிரபரணி ஆற்றில் மூழ்கி ரெயில்வே ஊழியர் பலி
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி ரெயில்வே ஊழியர் பலியானார்.
ஸ்ரீவைகுண்டம்:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கீழஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பேச்சிமுத்து (வயது 37). இவர் ரெயில்வே துறையில் டிராக்கிங் அமைக்கும் வேலை செய்து வந்தார். தற்போது பணிக்காக குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாபு காம்பவுண்டு பகுதியில் வசித்து வந்தார்.
நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் தண்டவாளம் பகுதியில் டிராக் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் ஒரு பகுதி ஆழ்வார்திருநகரி அருகே உள்ள திருக்களூரிலும் நடைபெற்று வருகிறது. திருக்களூரில் பேச்சிமுத்துவும் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் திருக்களூரில் இருந்து செய்துங்கநல்லூருக்கு ரெயில்வே டிராக் அமைப்பதற்கான தளவாட பொருட்களை எடுப்பதற்காக பணியாளர்களுடன் பேச்சிமுத்து சென்றார்.
அங்கிருந்து திரும்பி வரும்போது கருங்குளம் பஸ் நிறுத்தத்தை அடுத்த சுடலை மாடசாமி கோவில் அருகே வண்டியை நிறுத்தினர். பின்னர் அங்குள்ள ஆற்றில் கை, கால்களை கழுவுவதற்காக பேச்சிமுத்து மற்றும் அவருடன் வேலைபார்க்கும் முத்துராஜ், சாமிநாதன், ராஜா ஆகியோர் ஆற்றில் இறங்கி கைகால்களை கழுவினர்.
அப்போது பேச்சிமுத்து கைகளை கழுவியவாறு ஆழம் தெரியாமல் தண்ணீரில் இறங்கியுள்ளார். எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். உடனே அவருடன் வந்தவர்கள் கூச்சலிட்டனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனையடுத்து அவர்கள் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்திற்கும் ஸ்ரீீவைகுண்டம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வந்து ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொங்கராயக்குறிச்சி ஆற்றின் தெற்கு பகுதியான மெயின் ரோடு அருகே உள்ள ஆற்றில் அவரது உடல் கிடப்பதை கண்ட தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். அவர் ஆற்றில் மூழ்கி இறந்தது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பேச்சிமுத்துக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.