நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.13 லட்சம்

நெல்லையப்பர் கோவில் உண்டியலில் ரூ.13 லட்சம் காணிக்கை கிடைத்தது.

Update: 2021-08-16 20:01 GMT
நெல்லை:
நெல்லையப்பர் கோவில் உண்டியலில் ரூ.13 லட்சம் காணிக்கை கிடைத்தது.

21 உண்டியல்கள் திறப்பு

நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் வளாகத்தில் உள்ள 21 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நாகர்கோவில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நெல்லை மேற்கு பிரிவு ஆய்வாளர் தனலட்சுமி என்ற வள்ளி, தக்கார் பிரதிநிதி கங்கைகொண்டான் ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன.  

இவை அனைத்தும் அம்பாள் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பக்த பிரதிநிதிகள் காணிக்கை பொருட்கள், பணத்தை எண்ணினார்கள்.

ரூ.13 லட்சம்

இதில் ரூ.12 லட்சத்து 93 ஆயிரத்து 256 பணமும், 68.320 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்களும், 223.400 கிராம் எடை உள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் கிடைக்க பெற்றன. மேலும் ஒரு வெளிநாட்டு பணமும் கிடைத்தது.

இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்ட போது ரூ.17 லட்சத்து 71 ஆயிரத்து  256 கிடைத்தது. தற்போது கொரோனா பரவலையொட்டி கோவிலில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை போன்ற பிரச்சினையால் காணிக்கை பணம் குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்