தஞ்சையில் 10 இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாததை கண்டித்து தஞ்சையில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாததை கண்டித்து தஞ்சையில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர்கள்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தஞ்சையில் நேற்று 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை காட்டுத்தோட்டத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட பொருளாளர் பல்ராமன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் கோதண்டபாணி கலந்து கொண்டு பேசினார். வட்ட தலைவர் சுப்பிரமணியன், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சேர்ந்த ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
பெருத்த ஏமாற்றம்
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை. குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம நிர்வாக உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான காலமுறை ஊதியம், குறைந்த பட்ச ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு இல்லை.
கொரோனாவை காரணம் காட்டி 27 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி அறிவிக்கப்படவில்லை. காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது அரசு ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தொடர் முடிவதற்குள் தேர்தல் நேரத்தின் போது அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
10 இடங்கள்
தஞ்சையில் மருத்துவக்கல்லூரி, கூட்டுறவுத்துறை, வணிக வரித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, அரசு தொழிற்பயிற்சி நிலையம், புதிய கலெக்டர் அலுவலக வளாகம், வனத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, பனகல் கட்டிடம் என 10 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.