சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார்: பஞ்சாயத்து தலைவியின் கணவர் கைது
சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் காரணமாக பஞ்சாயத்து தலைவியின் கணவர் கைது செய்யப்பட்டார்.
உப்பிலியபுரம்
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஆங்கியம் ஊராட்சியில் நூறு நாள் வேலை சம்பந்தமாக ஊராட்சி தலைவி ஹேமா (வயது 38) பொதுமக்களிடம் விவாதித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கபிலரசனுக்கும்(45), ஹேமாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதில், காயம் அடைந்த கபிலரசன் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக உப்பிலியபுரம் போலீசில் கபிலரசன் புகார் அளித்தார். அதில், ஊராட்சி தலைவி ஹேமாவின் மகன் சந்துரு (26) தன்னை அடித்ததாகவும், தலைவியின் கணவர் பெரியசாமி (40) சாதிப்பெயரை சொல்லி திட்டியதாகவும் தெரிவித்திருந்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிந்து பெரியசாமியை கைது செய்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.