3 மாதங்களுக்கு பின்னர் வேலூர் மத்திய ஜெயில் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி
வேலூர் மத்திய ஜெயில் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி
வேலூர்
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெயில் கைதிகளை அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் நேரில் சந்தித்து பேச கடந்த ஏப்ரல் மாதம் அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு மாற்றாக கைதிகள் செல்போனில் வீடியோ கால் மூலம் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி வீடியோ காலில் கைதிகள் பேசி வந்தனர்.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் நேரில் சந்தித்து பேச அனுமதிக்கும்படி கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து முதற்கட்டமாக மத்திய ஜெயில்களில் உள்ள கைதிகளை சில கட்டுப்பாடுகளுடன் நேற்று முதல் சந்தித்து பேச ஜெயில் நிர்வாகம் அனுமதி வழங்கியது.
அதன்படி வேலூர் மத்திய ஆண்கள், பெண்கள் ஜெயில் கைதிகளை அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் 3 மாதங்களுக்கு பின்னர் நேற்று சந்தித்து பேசினார்கள். கைதிகளை சந்திக்க வருபவர்கள் ஒருநாள் முன்னதாக அனுமதி பெற பதிவு செய்ய வேண்டும். 2 தடுப்பூசிகள் செலுத்தி கொண்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்குள் பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கைதியிடம் ஒருவர் மட்டும் 15 நிமிடங்கள் மட்டும் பேச அனுமதி அளிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்று ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.