மாத்தூரில் சரக்கு வேன் மோதி என்ஜினீயர் பலி கறம்பக்குடியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

மாத்தூரில் சரக்கு வேன் மோதி என்ஜினீயர் பலியானார். கறம்பக்குடியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-16 18:04 GMT
ஆவூர்:
நண்பர் வீட்டு விசேஷம்
திருச்சி மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் சூர்யா (வயது 23). கேரள மாநிலத்தை சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவரின் மகன் ஜோபின் (வயது 23). இவர், சூர்யா வீட்டில் தங்கியிருந்து திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங்கை கடந்த வருடம் படித்து முடித்துள்ளார். 
இந்நிலையில் மாத்தூரில் உள்ள ஜோபின் நண்பர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் ஜோபின், சூர்யா ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் மாத்தூருக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அன்று இரவு மோட்டார் சைக்கிளில் மேலசிந்தாமணிக்கு புறப்பட்டு சென்றனர்.
என்ஜினீயர் பலி
ஜோபின் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல, சூர்யா பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். திருச்சி-புதுக்கோட்டை சாலை மாத்தூர் கடைவீதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே லால்குடியை சேர்ந்த அந்தோணி என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேன் ஜோபின் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. 
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோபின் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி சரக்கு வேன் டிரைவர் அந்தோணியை தேடி வருகிறார்.
விவசாயி தற்கொலை 
கறம்பக்குடி அருகே உள்ள ஆத்தியடிப்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ் (65). விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்தார். இதனால் மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார். உடனே வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி துரைராஜ் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் பாரதி கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்