62 வயதில் பாலிடெக்னிக் படிக்க ஆர்வம்: முன்னாள் ராணுவ வீரரின் கல்வி தாகம்
62 வயதில் பாலிடெக்னிக் படிக்க முன்னாள் ராணுவ வீரர் விண்ணப்பித்துள்ளர்.
புதுச்சேரி, ஆக-
மனிதன் தன்வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டே இருக்கலாம். கல்வி மீது ஒருவர் பற்று கொண்டால் அந்த தாகம் ஒருபோதும் தணியாது. அத்தகைய கல்வி தாகம் புதுவையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரருக்கு ஏற்பட்டுள்ளது. அவர் லாஸ்பேட்டை மோதிலால் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்துள்ளர்.
புதுவை வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 62). 11-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் இந்திய ராணுவத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். தனது 19-வது வயதில் ராணுவத்தில் சேர்ந்த அவர் கடந்த 2008-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின் புதுவை ரோடியர் மில்லில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
ஆட்டோ மொபைல் படிக்க ஆசைப்பட்ட அவரது சிறுவயது ஆசை நிறைவேறாமல் போக, தற்போது அந்த ஆசையை தீர்க்கும் விதமாக கடந்த ஆண்டு பாலிடெக்னிக்கல் சேர விண்ணப்பித்தார். ஆனால் இடம் கிடைக்கவில்லை.
தொடர் முயற்சியாக இந்த ஆண்டு அவர் மீண்டும் விண்ணப்பித்துள்ளார். இந்த முறை அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விவரங்களை பாலிடெக்னிக் நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. இவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் டாக்டர்களாகவும், மற்றொரு மகன் பெங்களூருவில் பட்டமேற்படிப்பும் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.