இந்து முன்னணியினர் மீது வழக்குப்பதிவு
இந்து முன்னணியினர் மீது வழக்குப்பதிவு
கோவை
கொரோனா தொற்று பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி ஒரே இடத்தில் பொதுமக்களை திரட்டக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் கோவை மாநகரில் இந்து முன்னணி அமைப்பினர் இந்த தடையை மீறி பல இடங்களில் ஊர்வலமாக சென்று உள்ளதுடன், கலைநிகழ்ச்சிகளையும் நடத்தினர்.
இதையடுத்து மாநகரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இந்து முன்னணியினர் மீது போலீசார் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை ரத்தினபுரியில் உள்ள சாஸ்திரி மைதானத்தில் கூட்டத்தை கூட்டியதாக இந்து முன்னணி தகவல் தொடர்பாளர் தனபால், சந்ரு, மணி உள்பட 10 பேர் மீது ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் கோவை தேர்நிலை திடலில் இருந்து வி.கே.கே.மேனன் ரோட்டிற்கு ஊர்வலமாக சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தியதாக இந்து முன்னணி உக்கடம் மண்டல தலைவர் கண்ணன், நிர்வாகிகள் சரவணன், ராமகிருஷ்ணன், மாணிக்க தங்கம் உள்ளிட்டோர் மீது வெறைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள லைட்ஹவுஸ் மைதானத்தில் தடையை மீறி ஒன்று கூடியதாக அந்த பகுதி இந்து முன்னணி தலைவர் அருள் உள்பட பல்வேறு நிர்வாகிகள் மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை வி.கே.கே. மேனன் ரோட்டில் தடையை மீறி இரு சக்கர வாகனங்களில் ஊர்வலம் சென்றதுடன், கலைநிகழ்ச்சிகள் நடத்தியதாக இந்து முன்னணி நிர்வாகி தசரதன், ஆறுமுகம், கிருஷ்ணன் 30-க்கும் மேற்பட்டோர் மீது காட்டூர் போலீசார் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் தடையை மீறி கூட்டம் சேர்த்தல், சமூக இடைவெளியை கடைபிடிக்காதது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் ராமநாதபுரம், செல்வபுரம், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடையை மீறி ஒன்று கூடியதுடன், கலைநிகழ்ச்சிகள் நடத்தியதாக இந்து முன்னணியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.