மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
தியாகதுருகம் அருகே மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதரிடம் கிராமமக்கள் மனு கொடுத்தனர்
கண்டாச்சிமங்கலம்
கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேற்று தியாகதுருகம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தியாகதுருகம் அருகே உள்ள உடையனாச்சி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தின் அருகே உள்ள மணிமுக்தா ஆறு அணைக்கட்டின் கீழ்ப்பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் டிராக்டர் மூலம் திருட்டுத்தனமாக மணல் அள்ளி விற்பனை செய்கின்றனர்.
குவியல் குவியலாக மணல்
மேலும் ஆற்றில் இருந்து மணலை எடுத்து வந்து இதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில், பிள்ளையார் கோவில் மற்றும் துளசி அம்மன் கோவில் அருகே குவியல், குவியலாக கொட்டி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டராகிய நீங்கள் மணிமுத்தா ஆற்றுப்பகுதியில் நேரில் ஆய்வு செய்து மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.