உழவர் சந்தையை மேம்படுத்த ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு
திருப்பத்தூர் மாவட்டத்தில் உழவர் சந்தையை மேம்படுத்த ரூ.2 கோடியே 57¾ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உழவர் சந்தையை மேம்படுத்த ரூ.2 கோடியே 57¾ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உழவர் சந்தை
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் நாட்டறம்பள்ளி ஆகிய 3 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைகளில் மொத்தமாக 2,800 விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து பயன் பெறுகின்றனர். தினசரி சராசரியாக 45 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன்மூலம் 60 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைத்து வருகிறது.
உழவர் சந்தையின் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களை இடைத்தரகர்களின்றி நேரடியாக நுகர்வோர்களுக்கு குறைந்து விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
ரூ.2½ கோடி ஒதுக்கீடு
விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்களை வாங்குவதால் நுகர்வோர்களுக்கு உள்ளுர் சில்லரை அங்காடி விலையை விட 15 சதவீதம் குறைவாக கிடைக்கிறது. இத்திட்டம் மேலும், சிறப்புற தமிழக அரசு இந்த ஆண்டு நமது மாவட்டத்திற்கு கூடுதல் நிதி ரூ.2 கோடியே 57¾ லட்சம் ஒதுக்கீடு செய்து, அனைத்து உழவர் சந்தைகளும் புனரமைக்கப்பட உள்ளன.
எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு அருகாமையில் உள்ள உழவர் சந்தைகளுக்கு சென்று விவசாயிகளிடம் நேரடியாகக் காய்கறி மற்றும் பழங்கள் வாங்கி உழவர்களின் வாழ்வாதாரம் மேம்பட ஒத்துழைப்பு தரவேண்டுகிறோம்.
மேலும் விவசாயிகள் உழவர் சந்தையில் உறுப்பினராக தேவைப்படும் ஆவணங்கள் குறித்து விளக்கங்கள் பெற வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் வேளாண்மை துணை இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.