திருமணமான 8 மாதத்தில் குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருநின்றவூரில் திருமணமான 8 மாதத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-16 07:04 GMT
ஆவடி,

ஆவடி அடுத்த திருநின்றவூர் நாச்சியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 27). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கல்பனா (20). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணமூர்த்தி வேலைக்கு எங்கும் செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடிபோதையில் சுற்றித்திரிவதால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு மது போதையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கல்பனா அதே பகுதியில் வசிக்கும் தனது அக்கா வீட்டிற்கு சென்று விட்டார்.

தற்கொலை

இதைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை வீட்டில் படுக்கை அறைக்குள் சென்று உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தி வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருநின்றவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், பலியான கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்