காட்டுப்பள்ளி ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் குறித்த வரவு, செலவு அறிக்கையை வெளியிட்ட ஊராட்சி மன்ற தலைவர்

காட்டுப்பள்ளி ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் குறித்த வரவு, செலவு அறிக்கையை வெளியிட்ட ஊராட்சி மன்ற தலைவர்.

Update: 2021-08-16 06:16 GMT
மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட காட்டுப்பள்ளி, காளாஞ்சி, காட்டுப்பள்ளி குப்பம், அண்ணாநகர், காட்டுப்பள்ளி காலனி, செப்பாக்கம் உட்பட பல கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

கடலோரப் பகுதியான ஊராட்சியில் 6 வார்டுகள் உள்ள நிலையில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் ஊராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இவ்விழாவில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார பணிகள், தெருவிளக்குகள் பராமரித்தல், சாலை வசதிகள், குடிநீர் வழங்குதல், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், மழைநீர் கால்வாய் உட்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து வரவு, செலவு, கையிருப்பு போன்ற விவர அறிக்கையை வெளியிட்டார்.

இதையடுத்து அனைத்து பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை பொதுமக்கள் பார்வையிட்டு அறிந்து கொள்ள ஏதுவாக அனுமதி அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர் ஊராட்சியின் வெளிப்படையான நிர்வாக அறிக்கை பதிவேடுகளைப் பார்வையிட்டு ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமனை பாராட்டினர். அப்போது ஊராட்சி துணைத்தலைவர் வினோதினி வினோத், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வான்மதிராஜி, பூஜாரஞ்சித், டில்லிபாபு, புவனேஸ்வரிசுரேஷ், எல்லமுத்து, ஊராட்சி செயலாளர் நாகஜோதி உட்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்