மதுரை அருகே கால்வாயில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி

மதுரை அருகே கால்வாய் தண்ணீரில் மூழ்கி சகோதரர்கள் உள்பட 3 பேர் இறந்தனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

Update: 2021-08-15 21:23 GMT
மதுரை,

மதுரை அருகே கால்வாய் தண்ணீரில் மூழ்கி சகோதரர்கள் உள்பட 3 பேர் இறந்தனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கால்வாய் தண்ணீரில் மூழ்கினர்

வைகை அணையில் இருந்து மதுரை மாவட்ட பாசனத்திற்கு பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கள்ளந்திரி வழியாக மேலூர் பகுதிக்கு செல்கிறது. தற்போது தண்ணீர் அதிகமாக செல்வதால் விடுமுறை நாட்களில் ஏராளமானோர் அங்கு வந்து குளிக்கின்றனர்.
கள்ளந்தரி சுக்கம்பட்டி பகுதியில் கால்வாயில் குளிப்பதற்காக மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த நண்பர்கள் 7 பேர் நேற்று அங்கு சென்றனர். அவர்கள் அங்கு குளித்து கொண்டிருந்தபோது 4 பேர் மட்டும் ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றதாக கூறப்படுகிறது. சிறிதுநேரத்தில் 4 பேரும் அங்குள்ள சுழல் தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடினார்கள்.

3 பேர் சாவு

பின்னர் 4 பேரும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அவர்கள் என்ன ஆனார்கள்? என்று தெரியாமல் உடன் சென்ற நண்பர்கள் கதறினார்கள். பின்னர் அவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மேலூர் மற்றும் தல்லாகுளம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரில் சிக்கி மூழ்கிய 4 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 3 பேரை பிணமாக மீட்டனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு உடனடியாக கொண்டு வரப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து ஒத்தக்கடை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இறந்தவர்களின் உடல்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர்கள்

ேமலும், விசாரணையில் முனிச்சாலை ருக்மணிபாளையம் பகுதியை சேர்ந்த ராமு மகன்கள் கோபி (வயது 19), கிஷோர்குமார் (18) மற்றும் நாகராஜன் மகன் ஹரிகரன் (18) என ஆகியோர் நீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. உயிரோடு மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவர் சூரியகுமார்(18) என்பதும் தெரியவந்தது.
கால்வாயில் மூழ்கி பலியான கோபி, கிஷோர்குமார் கல்லூரியிலும், ஹரிகரன் 12-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

கோரிக்கை

சம்பவம் நடந்த சுக்கம்பட்டி கால்வாய் பகுதி சுழல் நிறைந்தது என கூறப்படுகிறது. எனவே அங்கு குளிக்க செல்பவர்கள் தண்ணீரில் மூழ்கி இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆதலால் அங்கு யாரும் குளிக்க செல்லாதபடி தடுப்பு அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளிக்க சென்ற இடத்தில் 3 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்