கன்னட துணை நடிகைக்கு கொலை மிரட்டல்
ஏமாற்றி திருமணம் செய்ததுடன், நகை, பணத்தை திருடியதாக கொடுத்த புகாரை திரும்ப பெறும்படி கூறி கன்னட துணை நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
ரகசிய திருமணம்
கன்னட திரையுலகில் துணை நடிகையாக ஒருவர் இருந்து வருகிறார். அந்த நடிகை, பெங்களூரு ராஜகோபால்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கும், பிரபல ரவுடியான குனிகல் கிரியின் சகோதரர் கிரீசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருந்தது. நடிகையை, அவரது வீட்டில் வைத்தே யாருக்கும் தெரிவிக்காமல் கிரீஷ் ரகசியமாக திருமணம் செய்திருந்ததாக தெரிகிறது.
பின்னர் அந்த நடிகையும், கிரீசும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில், நடிகையின் வீட்டில் இருந்த 180 கிராம் தங்க நகைகள், ரூ.2½ லட்சம் திருட்டுப்போய் இருந்தது. அந்த நகை, பணத்தை கிரீஷ் தான் திருடி இருந்தது நடிகைக்கு தெரியவந்தது. இதுபற்றி கணவரிடம் அவர் கேட்ட போது, தனது தம்பி குனிகல் கிரி பெரிய ரவுடி என்றும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தாக தெரிகிறது.
நடிகைக்கு கொலை மிரட்டல்
இதையடுத்து, தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததுடன், வீட்டில் இருந்த நகை, பணத்தை கிரீஷ் திருடி விட்டதாக கூறி ராஜகோபால்நகர் போலீஸ் நிலையத்தில் அந்த நடிகை புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில், தன் மீது கொடுத்த புகாரை திரும்ப பெறும்படி அந்த நடிகைக்கு கிரீசும், அவரது சகோதரரும் ரவுடியுமான குனிகல் கிரி கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக குனிகல் கிரி சிறையில் இருந்தபடியே நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்தாக தெரிகிறது. இதுகுறித்தும் ராஜகோபால்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட கிரீசை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.